சாதிப் பெயர்கள் நீக்க அரசாணை - இடைக்கால தடை நீட்டிப்பு,ஜூலைக்கு வழக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டில் கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உயர் நீதி
உயர்நீதிமன்ற மதுரை கிளை


தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

அதேசமயம், அரசாணையை செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையையும் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம் தாக்கல் செய்த மனுவில், முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றி புதிய பெயர்கள் சூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

மேலும், ஆதி திராவிடர் காலனி, வண்ணான்குளம் போன்ற பெயர்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அரசாணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam