Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 27 ஜூன் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கீழடியில் இதுவரை கண்டறியப்பட்ட உறைகிணறுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறு உட்பட இதுவரை கிடைத்துள்ள 11 உறைகிணறுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை அல்ல. அவை வெவ்வேறு காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்தவை என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் முதற்கட்ட மதிப்பீடாக உள்ளது.
இந்த உறைகிணறுகள் 3 அடுக்குகள் முதல் 32 அடுக்குகள் வரையிலான உயரங்களில் காணப்படுகின்றன.
குறிப்பாக, கீழடியில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 32 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு, தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்த உறைகிணறுகளிலேயே மிகப்பெரியதாகப் பதிவாகியுள்ளது.
சுடுமண் வளையங்களால் அடுக்கடுக்காக உருவாக்கப்பட்ட இந்த உறைகிணறுகள், சங்க காலத் தமிழர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மை அறிவுக்கும், நகர நாகரிகத்திற்கும் சான்றாக விளங்குகின்றன.
தொடர்ச்சியாக கிடைத்து வரும் இத்தகைய கட்டமைப்புகள், வைகை நதிக்கரையில் செழித்து விளங்கிய பண்டைய நகர நாகரிகத்தின் தொன்மையையும், தொழில்நுட்பத் திறனையும் மேலும் உறுதிப்படுத்துவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
11-ஆம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் பல அரிய தொல்லியல் எச்சங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b