Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 ஜூன் (ஹி.ச.)
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முதற்கட்ட பரிசோதனையில் குழந்தைக்கு பிறந்து சுமார் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அண்மையில் பிரசவம் ஆன பெண்கள் குறித்தும் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தை முழுமையாக குணமடைந்த பின்னர், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் மூலம் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதயத்தை உலுக்கும் இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b