Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
சென்னை சூளைமேடு
சூளைமேடு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் (27) என்பவர் ஆவின் பாலை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
வழக்கம்போல் இன்று அதிகாலை விநாயகபுரம் பிரதான சாலையில் விற்பனைக்காக பால் பாக்கெட்டுகளை இறக்கி வைத்து, பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, 5 டிரேகளில் இருந்த சுமார் 60 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, சிசிடிவியில் பதிவான வாகன எண்ணை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளில் பால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பால் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிகாலை நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, பால் திருட்டு கும்பல்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ