Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 27 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி தனியார் நிறுவன ஊழியர்களை பேருந்து ஒன்று ஏற்றிச் சென்றது.
அப்பேருந்து, திடீரென கவரைப்பேட்டை மேம்பாலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது.
விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கவரைப்பேட்டை போலீசார், லாரி சாலையோரம் எந்தவித எச்சரிக்கை விளக்கும் இன்றி நிறுத்தப்பட்டிருந்ததா, பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா அல்லது அதிவேகமாக வந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது போக்குவரத்து சீரானது.
Hindusthan Samachar / vidya.b