Enter your Email Address to subscribe to our newsletters

காகிநாடா , 27 ஜூன் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் காகிநாடாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் அருகே, தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு வரவேற்பு என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர் தொடர்பான 12 விநாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக ஆந்திராவுக்கு வருகிறார் என்றும், காகிநாடாவில் உள்ள அந்தக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், இந்தப் பயணம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் அலுவலகம் சார்பிலோ, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் சார்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பொதுவாக ஒரு மாநில முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணம் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஆனால், விஜயின் பயணம் தொடர்பாக இதுபோன்ற எந்த தகவலும் வெளியாகாததால், இந்த பேனர் கல்லூரியின் விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகராக இருந்த காலத்திலிருந்தே விஜய்க்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவரது திரைப்படங்கள் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அவர் ஆந்திராவுக்கு வருகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், விஜயின் ஆந்திரப் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை உறுதிப்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA