Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மாற்றங்களின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தச் சூழலில், இன்று வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதனுடன் சில இடங்களில் கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூரில் 3 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்குளம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் சென்னை மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P