Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 27 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், ஆனி மாதம் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.
மலைப்பாதை வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் மலையேறி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசித்து வருகின்றனர்.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு , பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தீப்பெட்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி தாணிப்பாறை முதல் கோயில் வரை வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதோஷ நாளான இன்று மாலை நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையில் பங்கேற்க பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b