Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று சனிக்கிழமை சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் மொத்தம் 27 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று 22 ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளன.
இதேவேளை, நாளை அரக்கோணம் - திருவாலங்காடு இடையே மட்டும் மின்சார ரயில்கள் பகுதியாக இயக்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழித்தடத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பொறியியல் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இந்த தற்காலிக ரத்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தினசரி வேலைக்கு செல்வோர், மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்த வழித்தடத்தை நம்பியுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக பேருந்து சேவைகளை பயன்படுத்திக்கொள்ளவும், ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரங்களை 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலி மூலமோ தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b