பற்றி எரிந்த கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூர், 27 ஜூன் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டோ நகர் முதல் தெருவில் ஒரு மாடி வீட்டின் மேல் கூரை வீடு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் காமாட்சி என்ற பெண், தனது 9 வயது மகன் ஏகாம்பரம
Kumbakonam


தஞ்சாவூர், 27 ஜூன் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டோ நகர் முதல் தெருவில் ஒரு மாடி வீட்டின் மேல் கூரை வீடு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டில் காமாட்சி என்ற பெண், தனது 9 வயது மகன் ஏகாம்பரம், 3 வயது மகன் கோகுல் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

காமாட்சி வீட்டு வேலை செய்து வருகிறார். மூத்த மகன் ஏகாம்பரம், அங்குள்ள நகராட்சி பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். காமாட்சியின் கணவர் கார்த்திக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், இன்று காலை தனது 3 வயது மகன் கோகுலை கூட்டிக்கொண்டு காமாட்சி வீட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது மூத்த மகன் ஏகாம்பரம் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது, கூரை வீட்டில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது.

ஒருசில நொடிகளிலேயே வீடு முழுவதும் தீ பரவியது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் ஏகாம்பரம் திணறியுள்ளார். சிறிது நேரத்தில் தீயில் கருகி சிறுவன் ஏகாம்பரம் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்து குறித்து கவலறிந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த சிறுவனின் தாய் காமாட்சிக்கு ஆறுதல் கூறியதோடு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

இதனிடையே, விபத்து குறித்து அறிந்த கும்பகோணம் தாலுக்கா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவன் ஏகாம்பரத்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தீயணைப்பு வாகனம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தாமதமாக வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியதை கேட்டதும், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினரை அமைச்சர் வினோத் கடிந்துகொண்டார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கோட்டாட்சியர் திருமலை, கும்பகோணம் டிஎஸ்பி ஷர்மி உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

இச்சம்பவம் இன்று கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் என்றாலே 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நடந்த கொடூர பள்ளி தீவிபத்து தான் நினைவில் வரும்.

கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்த பெரும் விபத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் கூரை மற்றும் குடிசைகள் அமைக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளிலும் மாடிப்பகுதியில் தற்காலிக கூரை, தகரம் மற்றும் அட்டைகளை பயன்படுத்தி குடிசைகள் அமைக்கக்கூடாது என 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN