Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 ஜூன் (ஹி.ச)
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக விளங்கும் கொங்கணாபுரம் சந்தை இன்று வரலாறு காணாத விற்பனையை பதிவு செய்துள்ளது.
உள்ளூர் பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
பண்டிகை தேவைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தையில் குவிந்ததால் சந்தை வளாகம் முழுவதும் களைகட்டியது.
குறிப்பாக கிடா ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால், ஒரு ஆடு ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை விலை போனது. தரமான ஆடுகளுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,
பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இருமடங்கு வர்த்தகம் நடந்துள்ளது. ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கும் என்றனர்.
பண்டிகை கால விற்பனை சூடுபிடித்துள்ளதால் வரும் வாரங்களிலும் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b