Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் கே. பாக்யராஜ் (வயது 73) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று ( ஜூன் 27 ) காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக திரைப்பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், தனக்கென தனி முத்திரை பதித்து தமிழ் சினிமாவில் உயர்ந்தார்.
நகைச்சுவை, உணர்வுபூர்வமான கதைகள், சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர கவர்ந்தார்.
முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங் உள்ளிட்ட அவரது படைப்புகள் இன்றும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன.
இயக்குநராக சுமார் 25 படங்களையும், நடிகராக 75-க்கும் மேற்பட்ட படங்களையும் வழங்கிய பெருமை அவருக்கு உண்டு.
தமிழ் மட்டுமின்றி இந்தியில் அமிதாப் பச்சன், ஜெயபிரதா, ஸ்ரீதேவி, அனுபம் கெர் நடித்த ஆக்ரி ராஸ்தா படத்தையும் இயக்கியுள்ளார். திரைக்கதை ஆசிரியராக உணர்வுபூர்வமான கதைகளையும், மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் உருவாக்கியதில் அவருக்கு நிகர் அவரே.
மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமண நிகழ்ச்சியில் பாக்யராஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் வீடியோக்களுமே அவரது கடைசி பொதுவெளி தோற்றமாக அமைந்துவிட்டன.
இயக்குநர் கே. பாக்யராஜ் தனது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ், மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ், மகள் சரண்யா பாக்யராஜ் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் தமிழக ஆளுநர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.வி.ஆர்லோகர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b