Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (24). இவருக்கும், ஒட்டப்பிடாரம் வட்டம் ஓசனூத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருணம் நடைபெற்றது.
சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்குச் சென்ற இவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர், இருவரும் இணைந்து மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையர் கோயிலுக்கு சென்று அங்கும் சாமி வழிபாட்டை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, விலங்குகள் மீது பிரியம் கொண்ட தம்பதி, மலை உச்சியில் இருந்த குரங்குகளுக்கு அவர்கள் வைத்திருந்த பழங்களை சாப்பிடக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஏராளமான குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டதால், அதில் பயந்து போன அனிதா, நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் சுரேஷ், அவரின் உடலைக் கட்டியணைத்துக் கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை தீயணைப்பு மீட்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசாருடன் இணைந்து அனிதாவின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் இந்த வழக்கு மீதான விசாரணையை தொடங்கி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN