கும்மிடிப்பூண்டி அருகே நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து
திருவள்ளூர், 27 ஜூன் (ஹி.ச.) கும்மிடிப்பூண்டி அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து ஓட்டுநர் இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். தீய
விபத்து


திருவள்ளூர், 27 ஜூன் (ஹி.ச.)

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து ஓட்டுநர் இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அவரை உயிருடன் மீட்டனர்.

கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயில் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்னை செங்குன்றம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் தாக்கத்தில் லாரியில் இருந்த கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகள் பேருந்தின் முன்பகுதியை ஊடுருவி, ஓட்டுநரின் இரண்டு கால்களிலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார்.

தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேருந்தின் முன்பகுதியை வெட்டி அகற்றி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஓட்டுநரை மீட்டனர்.

படுகாயமடைந்த ஓட்டுநருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P