Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 ஜூன் (ஹி.ச.)
திருச்சியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்து இருந்தேன்.
எனது விண்ணப்பம் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே எனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து, புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சதீஷ் மீது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு ஒரு குற்றவியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாஸ்போர்ட் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விண்ணப்பதாரருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியும். வெறும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டும் பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையாக இருக்காது.
எனவே, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டுமே காரணம் காட்டி மனுதாரரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிலுவையில் வைத்திருப்பது பாஸ்போர்ட் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது” என்றார்.
இதையடுத்து, மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து, பிற தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், புதிய பாஸ்போர்ட்டை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர், நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN