ம.தி.மு.க. பொதுக்குழு இன்று - தி.மு.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளியா?
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கட்சியின் எதிர்கால அரசியல் பயணம்
வைகோ


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கட்சியின் எதிர்கால அரசியல் பயணம், கூட்டணி நிலைப்பாடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவது, இனி வரும் தேர்தல்களில் கூட்டணி தலைமை கட்சியின் சின்னத்தில் அல்லாமல், ம.தி.மு.க.வின் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் தற்போதைய தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது போன்ற தீர்மானங்கள் குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக ம.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கூட்டணியில் கட்சிக்கு உரிய மரியாதையும் அரசியல் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே நிலவி வந்ததாகவும், அதுவே தற்போதைய முடிவுகளுக்கான பின்னணியாகக் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுக்குழுவுக்கு முன்பாக நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்திலும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இறுதி முடிவு பொதுக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P