Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
மதிமுக - திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் இன்று திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் செல்வன், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர் திமுக உறுப்பினராகவும் கருதப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை இன்று நடைபெறும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கு முன்பாகவே, செந்தில் செல்வன் மதிமுகவில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி திமுக உறுப்பினராகவே தொடரப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
மேலும், மதிமுக தலைமை எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியான தகவல்களையும் அவர் ஏற்க மறுத்திருந்தார்.
அதேபோல், நேற்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்திலும் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P