Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறித்து முரசொலியில் வெளியான கட்டுரைகள் அவதூறு மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்
க.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தனிநபர் முடிவுகள் அல்ல, கட்சியின் கூட்டு முடிவுகளே செயல்படுத்தப்படுகின்றன என்றும், தேர்தலுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில் பாஜக ஆட்சியைத் தடுக்கவே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவுடன் கடந்த காலங்களில் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தபோதும், தொழிலாளர் உரிமைகள், 8 மணி நேர வேலை, தனியார்மயக் கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து விமர்சித்துள்ளதாகவும், அதேபோல் தற்போதைய ஆட்சியையும் தேவையான இடங்களில் விமர்சிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மேற்கு வங்கம், கேரளா, அதானி முதலீடு, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் முரசொலி உண்மைகளைத் திரித்து எழுதியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கருத்து வேறுபாடுகளை அவதூறுகளால் அல்ல, அரசியல் உரையாடலின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
பாஜக மற்றும் சங்பரிவார் அரசியலை எதிர்கொள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளை ஆதரிக்கும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், முரசொலி அவதூறுகளை நிறுத்தி அரசியல் ரீதியிலான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் க. கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam