வீடு புகுந்து தந்தை, மகன்களுக்கு அரிவாள் வெட்டு - இளைஞர் உயிரிழப்பு
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) சென்னை சின்ன நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கு சரத் (27), சஞ்சய் (24) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்றிரவு இவர்களின் வீட்டின் அருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதே ப
Nolambur


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

சென்னை சின்ன நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கு சரத் (27), சஞ்சய் (24) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்றிரவு இவர்களின் வீட்டின் அருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவருடன் சஞ்சய் மற்றும் சரத் தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் சஞ்சய்யும் சரத்தும் இணைந்து உதயாவை அடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயா, தனது சகோதரர்களான ராகேஷ், கார்த்திக் மற்றும் கஞ்சா போதையில் இருந்த தனது நண்பர்களை வரவழைத்து நள்ளிரவில் சஞ்சய் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் சஞ்சய் மற்றும் சரத்தை அரிவாள், கத்தி மற்றும் பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கினர். இவர்களைத் தடுக்க வந்த சஞ்சய் தந்தை முருகதாஸையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில், சஞ்சய் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சரத்தும், தந்தை முருகதாஸும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சஞ்சய் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், நொளம்பூர் காவல் நிலையத்தினர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ், உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், கொலையில் தொடர்புடைய முக்கிய நபரான மதுரவாயலைச் சேர்ந்த ரூபேஷ் (23) என்பவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார்.

இதனால் காவல் துறையினர் தற்காப்புக்காக ரூபேஷின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

மேலும் இந்த துணிகரக் கொலையில் தொடர்புடைய நவீன்குமார் (24), உதயராஜ் (21), சூர்யா (20), கார்த்திக் ராஜா (26), ராகேஷ் ராஜா (26), மேஷாக் (22) மற்றும் சூர்யபிரகாஷ் (27) ஆகிய மேலும் 7 எதிரிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் நொளம்பூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN