பழமை வாய்ந்த சிலையை கடத்த முயற்சித்த 3 பேர் கைது
காஞ்சிபுரம், 27 ஜூன் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டத்தின் வாலாஜாபாத் அருகேயுள்ள திம்ம ராஜா பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, 3 பேர் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கட்டப்பையில் வைத்து கடத்த முயற்சிப்பதாக, காஞ்சிபுரம் சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்
Statue


காஞ்சிபுரம், 27 ஜூன் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வாலாஜாபாத் அருகேயுள்ள திம்ம ராஜா பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, 3 பேர் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கட்டப்பையில் வைத்து கடத்த முயற்சிப்பதாக, காஞ்சிபுரம் சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் உமாராணிக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

தகவலின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வடக்கு மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் உமாராணி, தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அவருடைய வழிகாட்டுதலின்படி, தனிப்படையினர் திம்மராஜன்பேட்டை பேருந்து நிறுத்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கையில் கட்டப்பையுடன் நின்று கொண்டிருந்த மூவரை போலீசார் விசாரித்தபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார், மூவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், அவர்கள் கையிலிருந்த பையையும் சோதனையிட்டுள்ளனர்.

அப்போது, சுமார் 30.5 சென்டிமீட்டர் உயரம், 16 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 2.300 கிலோ எடை கொண்ட பழமையான உலோக அம்மன் சிலை பைக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தனிப்படை போலீசார், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தென்னேரி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (33), ஆத்தூர் வடபாதி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (33), காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்(36) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டிருப்பதும் அம்பலமானது.

இதனையடுத்து, 3 பேரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் விக்னேஷ் தாமாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர்களிடமிருந்த சிலையை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்கள் மீது பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவுகள் 35(1)(e), 106 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 305(d) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் அசல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சிலை ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், கடத்திலில் ஈடுபட்டவர்களையும் ஆஜர்படுத்தி தற்போது அவர்களை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN