Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ( ஜூன் 28 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது நிரம்பாத அனைத்து குழந்தைகளுக்கும் இந்த முகாமில் சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் 43,051 மையங்களில் இந்த மாபெரும் போலியோ ஒழிப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகியவற்றில் சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர, பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட உள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்கனவே வழக்கமான தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், நாளை நடைபெறும் இந்த சிறப்பு முகாமிலும் கட்டாயம் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் சொட்டு மருந்தால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த முகாமை பெற்றோர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் நாளை காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் அரசு பள்ளி வளாகத்தில் நாளை காலை நடைபெறவுள்ள முகாமில் முதலமைச்சர் விஜய், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒருவருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, மாநிலம் தழுவிய முகாமை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 0 முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், சந்தைப் பகுதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை மாநகர மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b