Enter your Email Address to subscribe to our newsletters

பூரி, 27 ஜூன் (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தில் தேவஸ்நான பூர்ணிமா எனும் ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை ஜூன் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்து நாட்காட்டியின்படி ஜ்யேஷ்ட மாத பௌர்ணமி நாளில், அதாவது பொதுவாக ஜூன் மாதத்தில் வரும் தேவஸ்நான பூர்ணிமா, ஜெகந்நாதரின் பிறந்தநாளாக கருதப்படுவதால் மிகுந்த மத முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த நாளில் ஜெகந்நாதர், அவரது சகோதரர் பலபத்ரர், சகோதரி சுபத்ரா தேவி மற்றும் சுதர்சனர் ஆகியோர் கோயில் கருவறையிலிருந்து பிரம்மாண்ட ஊர்வலமாக ஸ்நான மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படுகின்றனர்.
ஸ்நான மண்டபம் என்பது கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள உயர்மேடை ஆகும்.
அங்கு தெய்வங்களுக்கு 108 குடங்கள் புனித நீரால் திருமஞ்சனம் செய்யப்படும். இந்த புனித நீர் கோயிலின் வடக்கே உள்ள சுனா கூபம் எனும் தங்க கிணற்றிலிருந்து எடுக்கப்படுவது வழக்கம்.
திருமஞ்சனம் முடிந்த பின்னர், தெய்வங்களுக்கு கஜானன பேஷம் அல்லது ஹாத்தி பேஷம் எனப்படும் யானை முக அலங்காரம் செய்யப்படுகிறது.
விநாயகப் பெருமானை போல தெய்வங்கள் அலங்கரிக்கப்படும் இந்த தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற ரத யாத்திரைக்கு முன்னர் பக்தர்கள் தெய்வங்களை நேரடியாக தரிசிக்கும் அரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
திருமஞ்சனத்திற்கு பின்னர் தெய்வங்கள் நோய்வாய்ப்படுவதாக ஐதீகம். அதனால் அவர்கள் அனவசரம் என்ற 15 நாள் தனிமை காலத்திற்கு செல்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் தெய்வங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வருவதில்லை. அதிகளவில் நீராட்டம் செய்யப்பட்டதால் தெய்வங்களுக்கு காய்ச்சல் ஏற்படுவதாகவும், அது ஓய்வெடுக்கும் காலம் என்றும் நம்பப்படுகிறது.
அனவசர காலத்தில் தெய்வங்களுக்கு புலுரி தைலம் எனும் சிறப்பு மூலிகை எண்ணெய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு தெய்வங்களின் ஓவிய வடிவமான பட்டி தியான்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகின்றன. 15 நாள் ஓய்வுக்கு பின்னர் தெய்வங்கள் குணமடைந்து மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து நடைபெறும் மாபெரும் ரத யாத்திரையில், தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளி குண்டிச்சா கோயிலுக்கு பவனி வருவார்கள். இது உலக பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஸ்நான யாத்திரைக்கும் ரத யாத்திரைக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூரிக்கு வந்து திருவிழாக்களில் பங்கேற்பது வழக்கம்.
இதனால் பூரி நகரம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காட்சியளிக்கிறது.
ஜூன் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரையை முன்னிட்டு, பூரி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஸ்நான யாத்திரைக்கு சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான பக்தர்கள் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் மாநில காவல்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதையொட்டி மத்திய சரக காவல்துறை தலைவர் சத்யஜித் நாயக் மற்றும் பூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீக் சிங் ஆகியோர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். திருவிழா அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 79 படைப்பிரிவு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மூத்த அதிகாரிகள், அதிரடிப்படை எனப்படும் Quick Action Teams, மோப்ப நாய் பிரிவு, கட்டிடங்களின் மேல் கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை பணியமர்த்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் அனைத்து பகுதிகளும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.
கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனி போக்குவரத்து திட்டம், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள், அவசரகால மீட்பு அமைப்புகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b