பெற்ற குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்த தம்பதி கைது
சேலம், 27 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி கவிதா. தறி நெய்யும் தொழில் செய்து வரும் இந்த தம்பதியருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன. போதிய வரும
Born Baby


சேலம், 27 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி கவிதா. தறி நெய்யும் தொழில் செய்து வரும் இந்த தம்பதியருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

போதிய வருமானம் இல்லாததால், கடுமையான வறுமையிலும், பொருளாதார நெருக்கடியிலும் இவர்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி கவிதாவுக்கு அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்தம்பதியருக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளை வளர்க்கவே திணறி வரும் நிலையில், நான்காவது குழந்தையையும் வளர்க்க முடியாது என தம்பதியர் கருதியுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்குப் பிறந்த 7 நாட்களே ஆன பெண் குழந்தையை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு இரண்டு லட்ச ரூபாய்க்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.

ரகசியமாக நடந்த இந்த குழந்தை விற்பனை குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலம்பரசனுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சீனிவாசன், கவிதா தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் இந்திரகுமார் - முத்துலட்சுமி தம்பதியையும் போலீசார் விசாரித்தனர்.

இதில், குழந்தை விற்பனை செய்யப்பட்டதை இரு தம்பதிகளும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, குழந்தையை ஒப்படைக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், தாங்கள் வாங்கிய குழந்தையை, ராமநாதபுரம் தம்பதியர், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, குழந்தையை விற்ற தம்பதியையும், வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN