Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 ஜூன் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி, செசல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் அழைப்பை ஏற்று, இன்று (ஜூன் 27) முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள் அரசு முறைப் பயணமாக செசல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் அந்நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, செசல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, பொருளாதாரம், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டாளிகளில் ஒன்றாக செசல்ஸ் விளங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேசிய தின அணிவகுப்பில் இந்திய ஆயுதப் படையினரும், இந்திய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் பங்கேற்க இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் மோடி செசல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுடன், அங்குள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்திக்க உள்ளார்.
இந்த அரசு முறைப் பயணம், இந்தியா–செசல்ஸ் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, கடல்சார் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P