Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 28 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருக்காக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த பாலாஜியின் 9 வயது மகன் திருமேணி (எ) கருப்பன்ஜி, அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சனிக்கிழமை மாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து விளையாடச் சென்ற சிறுவன், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப் பிறகு, வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் இல்லாத குளத்தின் கரையில், கழுத்து மற்றும் முகத்தில் காயங்களுடன் சிறுவன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தகவலறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன், வடகாடு காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன் ஆகியோர் மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையருமான மணிகண்டன் நேரில் சென்று நள்ளிரவிலும் விசாரணையை மேற்கொண்டார்.
நான்காம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கருக்காக்குறிச்சி, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam