மூத்த இயக்குநர் பாக்யராஜ் மறைவு – இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து
சென்னை, 28 ஜூன் (ஹி.ச) தமிழ் சினிமாவின் ''திரைக்கதை மன்னன்'' எனப் போற்றப்பட்ட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (73) நேற்று (ஜூன் 27, 2026 ) காலை மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென ஏற்பட்ட மா
All film shoots cancelled today.


சென்னை, 28 ஜூன் (ஹி.ச)

தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' எனப் போற்றப்பட்ட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (73) நேற்று

(ஜூன் 27, 2026 ) காலை மாரடைப்பால் காலமானார்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

1979-இல் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' என 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25 படங்களை இயக்கியும் தனித்துவமான திரைக்கதை மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார்.

அவரது மறைவையொட்டி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று ஜூன் 28, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த கலைஞருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இன்று பகல் 1.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதையாக்கம், கிராமிய வாழ்வியல், குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை பதித்த பாக்யராஜின் மறைவு, திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவருக்கு மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் நடிகர் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோர் உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b