Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 28 ஜூன் (ஹி.ச.)
“இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை பாரமாக அல்ல, செல்வமாக பார்க்கும் மனநிலை உருவாக வேண்டும்” என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி மாநிலத்தில் நடைபெறும் பல்ஸ் போலியோ தடுப்பூசி திட்டத்தை அமராவதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் அவர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறார்களுக்கு அவர் நேரடியாக போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
பின்னர் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய முதல்வர், குழந்தைகளை அன்புடன் தூக்கி விளையாடி அவர்களின் நலனை விசாரித்தார்.
குழந்தைகளின் ஆரோக்கிய நிலை மற்றும் தடுப்பூசி செலுத்தும் அட்டவணை குறித்து கேட்டறிந்தார்.
அரசு வழங்கும் அனைத்து தடுப்பூசிகளையும் தவறாமல், குறிப்பிட்ட காலக்கெடுவில் செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.
மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போலியோ தடுப்பூசி முகாமின் மூலம், 5 வயதுக்குட்பட்ட சுமார் 49.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தை வளர்ப்பு என்பது தாயின் பொறுப்பு மட்டுமல்ல; தந்தையும் அதில் சமமாக பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார். முன்பு இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
அந்த பாரம்பரிய கூட்டுக் குடும்ப அமைப்பு மீண்டும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA