Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 28 ஜூன் (ஹி.ச.)
அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கிச்சன் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கடுமையாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 5 ஸ்மார்ட் கிச்சன்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் கீழ் பணியாற்றும் 233 சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து பணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் தொடங்கப்பட உள்ள 33 ஸ்மார்ட் கிச்சன்களாலும் தற்போதுள்ள பணியாளர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக சுயஉதவி குழு பெண்களுக்கு தலைமை சமையலர், உதவி சமையலர், உதவியாளர், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.
சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை மறுத்த லோகேஷ், 2026 ஏப்ரல் மாதம் வரை அனைவருக்கும் ஊதியம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அரசின் நோக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான, சத்தான, தரமான உணவை வழங்குவதே என்றும், ஏழை மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழை குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைப்பதைக் கூட ஏன் எதிர்க்க வேண்டும்? என்றும் அமைச்சர் லோகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA