Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் மீது முழுமையான, சுதந்திரமான விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு மட்டுமே பணிநியமனம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு நடத்தியதாகவும், இதில் 42,064 பேர் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைத் தாளின் மதிப்பீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பலர், விளக்கக் கட்டுரைத் தாளில் பூஜ்ஜியம் அல்லது ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளதாகவும், குறிப்பாக 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்ற தமிழ் பாடத் தேர்வருக்கு கட்டுரைத் தாளில் பூஜ்ஜியம் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரத்தில், புறநிலைத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு கட்டுரைத் தாளில் 50-க்கு 49 வரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இதனால் இறுதித் தரவரிசை மாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விளக்கக் கட்டுரைத் தாளுக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் நடைமுறையை TRB பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான மறுமதிப்பீடு நடத்த வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருப்பதால் கற்பித்தல் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ள அவர், தற்போதைய தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்து, சுதந்திரமான முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் TVK அரசை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P