Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பரமசிவம் மற்றும் மாணவி செல்வபாரதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த கார், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பரமசிவம், செல்வபாரதி, பொன்கிளி, சந்தியா மற்றும் கணேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பரமசிவம் மற்றும் செல்வபாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அரசு பள்ளி ஆசிரியர் பரமசிவத்தின் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த அவரது மனைவி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam