Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 28 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜியின் மகன் திருமேனிநாதன் என்கிற கருப்பன்ஜி (9) 4 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த திருமேனிநாதன் மாலை நேரத்தில் வீட்டிற்கு பின்னால் சுமார் 300 மீட்டர் தூரத்தில் விளையாடச் சென்றுள்ளார்.
மகன் விளையாடச் சென்றதைப் பார்த்துவிட்டு பாலாஜி திருச்சிற்றம்பலம் சென்றுள்ளார். இருட்டத் தொடங்கியும் விளையாடச் சென்ற சிறுவன் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் உறவினர்கள் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு வீட்டிற்கு எதிரே சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் திருமேனிநாதன் சடலமாக கிடந்ததைப் பார்த்து அலறித்துடித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கறம்பக்குடி காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விளையாடச் சென்ற சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் உடலில் காணப்படும் காயங்கள் குறித்தும், மரணத்திற்கான காரணம் குறித்தும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b