சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு செயல் திட்டம் வகுக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.) சூப்பர் எல்-நினோவின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தயாராகி, சிறப்பு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெ
வானதி


தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.)

சூப்பர் எல்-நினோவின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தயாராகி, சிறப்பு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை வழக்கத்தை விட 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதே சூப்பர் எல்-நினோ எனக் குறிப்பிடப்படுவதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தாக்கமாக தென்மேற்கு பருவமழை குறைந்திருப்பதுடன், காவிரி உள்ளிட்ட தென் மாநில நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழைப்பொழிவு குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன் விளைவாக மேட்டூர் அணையை வழக்கம்போல் ஜூன் 12-ஆம் தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், அதிக வெப்பஅலை, வறட்சி, கனமழை, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் காலநிலை நிபுணர்களுடன் ஆலோசித்து, எல்-நினோ சிறப்பு செயல் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மத்திய அரசு அமைத்துள்ள எல்-நினோ கண்காணிப்பு அலகைப் போல தமிழ்நாட்டிலும் தனி கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், ஏரிகள், குளங்கள், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும், சூரியசக்தி, காற்றாலை மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும், வறட்சியைத் தாங்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிக வெப்பத்தால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க தேவையான தடுப்பூசிகள் மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த தொழிற்சாலைகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், விவசாயத்தில் குறைந்த தண்ணீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்க வேண்டும், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் நவீன தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P