ராமேஸ்வரம் மீனவர்களை துரத்தி விரட்டிய இலங்கை கடற்படை: பரபரப்பு வீடியோ வெளியானது
ராமேஸ்வரம், 28 ஜூன் (ஹி.ச.) ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ரோந்து படகுகள் துரத்தி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (ஜூன் 27) 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு
மீனவர்


ராமேஸ்வரம், 28 ஜூன் (ஹி.ச.)

ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ரோந்து படகுகள் துரத்தி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (ஜூன் 27) 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையிலான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து தப்பிக்க மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மின்னல் வேகத்தில் இயக்கி பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனர். இந்த துரத்தல் சம்பவத்தின்போது, இலங்கை கடற்படையின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகுகளை தொடர்ந்து விரட்டிச் செல்லும் காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளன.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விரட்டல் நடவடிக்கைகள் மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P