மறைந்த மூத்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடக்கம்
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர
மறைந்த மூத்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடக்கம்


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய

அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.

பாக்யராஜ் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பாக்யராஜ் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட போது போலீசார் மரியாதை செய்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 9 மணியளவில் துவங்கியது.

வள்ளுவர் கோட்டம் சிக்னல், கோடம்பாக்கம் ஹைவே வழியாக ஆர்கே சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக பெசன்ட் நகர் மின்மயானம் வந்து அடைகிறது.

அங்கு அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது. அதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. பாக்யராஜின் உடலை வீட்டில் இருந்து வாகனம் வரை பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் தோளில் சுமந்து வந்தனர்.

Hindusthan Samachar / vidya.b