நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்
நெல்லை, 28 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில்
Grand Aani Chariot Procession at Nellaiappar Temple


நெல்லை, 28 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது.

8ஆம் திருநாளான சனிக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி கோலத்திலும் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்லும் வீதி உலா வருதல் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 28) நடைபெற்றது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் விழாக் கோலம் பூண்டது.

தேரோட்டத்தையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது.

இத்தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர்.

தேரோட்டத்துக்காக கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ரத வீதிகளில் 5 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போத்தீஸ் கார்னர் பகுதியில் போலீஸார் உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நான்கு ரத வீதிகளிலும் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திலிருந்து கட்டுப்பாட்டு அறை உதவியுடன் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியும், காவல் வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.

தேரோட்ட நிகழ்வுக்காக 1200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை

திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், இரு சக்கர வாகனங்களை அலங்கார வளைவு அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான்கு ரத வீதிகள், மௌன்ட் சாலை, போஸ் மார்க்கெட், நயினார்குளம் சாலை உள்ளிட்ட 11 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b