சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து மக்களை வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை ப
சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து மக்களை வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் நீடித்ததால், சென்னையின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக தி.நகர், வேளச்சேரி, பெருங்குடி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், அதிகாலை பணிக்குச் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நிலவிய வெப்ப அலையால் அவதிப்பட்டு வந்த சென்னைவாசிகளுக்கு இந்த மழை இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. நகரின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b