கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
பாலக்காடு , 28 ஜூன் (ஹி.ச.) பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரை பிடித்து அவரது புத்
A


பாலக்காடு , 28 ஜூன் (ஹி.ச.)

பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரை பிடித்து அவரது புத்தகப்பையை சோதனை செய்தனர்.

அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அருகில் நின்றிருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்தபோது, அதில் மேலும் 1½ கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து 3 மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சமூக வலைத்தளம் மூலம் நெம்மாறா பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபருடன் மாணவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்தது.

அதன்படி, நண்பர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அந்த வாலிபருடன் கோவைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு சென்று கஞ்சா வாங்கி வந்துள்ளனர். பின்னர் அந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்காக புத்தகப்பைகளில் வைத்து சுற்றித் திரிந்தபோது போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 3 பள்ளி மாணவர்களையும், 19 வயது வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பாலக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA