Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
மாம்பழம் மற்றும் மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து, அரசு நேரடிக் கொள்முதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாம்பழச் சாகுபடி விளங்கி வருகிறது. ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து விளைவிக்கும் மாம்பழங்களுக்கு அறுவடை நேரத்தில் நியாயமான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
விதைப்பு முதல் அறுவடை வரை அதிக செலவு, கடின உழைப்பு மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் விவசாயிகளின் வருமானம், இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல், கோதுமை, பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய தோட்டக்கலைப் பயிரான மாம்பழம் மற்றும் மாங்காய்க்கு அதுபோன்ற பாதுகாப்பு இல்லாதது நியாயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, மாம்பழம் மற்றும் மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், அரசு நேரடிக் கொள்முதல் மையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், பழக்கூழ் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மையங்கள், ஏற்றுமதி வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் கருணையை அல்ல, தங்களது உழைப்புக்கான நியாயமான வருமானத்தையும் சட்டப்பூர்வமான பாதுகாப்பையும் மட்டுமே எதிர்பார்க்கின்றனர். எனவே, மாம்பழ விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, குறைந்தபட்ச ஆதார விலையுடன் அரசின் நேரடிக் கொள்முதல் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ