மத்தூர் அருகே கோர விபத்து: கோவிலில் இருந்து திரும்பிய ஐடி ஊழியர், மகள் உயிரிழப்பு – மனைவி, மகன் தீவிர சிகிச்சை
கிருஷ்ணகிரி, 28 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் சோனரஅள்ளி பிரிவு சாலையில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர் மற்றும் அவரது மகள் உயிரிழந்தனர். மனைவி மற்றும் ம
விபத்து


கிருஷ்ணகிரி, 28 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் சோனரஅள்ளி பிரிவு சாலையில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர் மற்றும் அவரது மகள் உயிரிழந்தனர். மனைவி மற்றும் மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கருவேலங்காடு பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி கார்த்திகா, மகள் அஸ்விகா, மகன் ஸ்ரீவந்த் ஆகியோருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மத்தூர் அருகே சோனரஅள்ளி பிரிவு சாலையில் வந்தபோது, எதிரே வந்த லாரி காருடன் மோதியதில் கார் லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது. தகவலறிந்து மத்தூர் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் கிரேன் உதவியுடன் காரை மீட்டு, அதில் சிக்கியிருந்த நால்வரையும் வெளியே கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சிறுமி அஸ்விகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகனசுந்தரம், கார்த்திகா, ஸ்ரீவந்த் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழியிலேயே மோகனசுந்தரம் உயிரிழந்தார்.

தற்போது கார்த்திகா மற்றும் ஸ்ரீவந்த் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும், எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், சாலையை சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகள் நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam