Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டம் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் - சிவகங்கை சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 37 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையை திருவாதவூரைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சிவபாலன் என்பவரின் மாட்டு வண்டி தட்டிச்சென்றது. முதல் பரிசு பெற்ற மாட்டு வண்டிக்கு 49இன்ஞ் எல் இ டி டிவி பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக தற்போது மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்,
தமிழகத்தில் ஒரே பவர் சென்டர் தான் எனவும் குறிப்பாக மதுரையில் முன்பு இருந்ததைப் போல அல்லாமல் தற்போது விஜய் அவர்களின் பவர் சென்டர் மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்,
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து தற்போது வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி வருவதாக தெரிவித்தார்.
திமுக மற்றும் அதிமுக சார்பில் ஆட்சி அமைப்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்த அவர், இது போன்ற முயற்சிகளை பிடிக்காத திமுக எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தவெக தேர்தல் வாக்குறுதியின் படி மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்குவது குறித்த கேள்விகளுக்கு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும், பயிர் கடன் தள்ளுபடி மூலம் 14 லட்சம் விவசாயிகள் பயனடைந்து தங்களுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு சில இடங்களில் திமுகவினரின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தவர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கிரானைட் முறைகேடு வழக்கில் விரைவில் விசாரணை நடத்தி கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் தெரிவித்தார்.
மதுரையில் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் இதற்கு தேவையான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN