திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி; குதிரைப் பேரம் நடைபெறுகிறது – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
மதுரை, 28 ஜூன் (ஹி.ச) மதுரை மேலூரில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான ஊழல் குற
Ctr


மதுரை, 28 ஜூன் (ஹி.ச)

மதுரை மேலூரில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். சோதனை நடைபெற்ற இடங்களில் மக்களின் பணம் கோடிக்கணக்கில் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குதிரைப் பேரம் மூலம் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். கூட்டணிக் கட்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், திமுகவுக்குள் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இரு கட்சித் தலைவர்களின் குடும்பச் சொத்துக்களை பாதுகாக்கவும், ஊழல்களை மறைக்கவும் திமுக மற்றும் அதிமுக சுயநல அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கூட அவர்கள் தயாராக இருப்பதாகவும் நிர்மல் குமார் விமர்சித்தார்.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் பல இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் பெருமளவில் வெட்டப்பட்டுள்ளதாகவும், இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கும் எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்றும் கூறினார். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ