Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 ஜூன் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை விவகாரம், டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம், தவெக மீது முன்வைக்கப்பட்ட குதிரை பேரம் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதே காவிரி பிரச்சினைக்கு பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். நேரடியாக பேசி தீர்க்க வேண்டுமா, சட்டரீதியாக அணுக வேண்டுமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. இதில் எது சரியானது என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மதம், மொழி, ஜாதிக்கு அப்பாற்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையே முக்கியம் என்றார்.
மேலும், திரைப்பட தயாரிப்பாளரும் இந்த நாட்டின் குடிமகன்தான். முதலமைச்சரின் கொள்கைகளையும் கருத்துகளையும் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெளிப்படுத்துவார். ஒருவர் நியமிக்கப்பட்ட உடனேயே அவருக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று கூற முடியாது. அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, சமூகப் பணியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை என்று தெரிவித்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் என்பதற்காகவே நியமிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, அதையும் இதையும் முடிச்சுப் போடக் கூடாது என்று பதிலளித்தார்.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், இதையே மத்திய அரசும் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் என்ன நடந்தது? ஒரு அரசாங்கத்தையே மாற்றினார்கள். ஒரு இயக்கம் நல்ல முறையில் செயல்பட்டால் யார் வேண்டுமானாலும் அதில் இணையலாம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கம்பம் ராமகிருஷ்ணனும், அனிதா ராதாகிருஷ்ணனும் திமுகவில் இணைந்து தேர்தலில் வாய்ப்பு பெற்றனர் என்றார்.
மேலும், எங்களைப் பொறுத்தவரை 120 எம்.எல்.ஏ.க்கள் தேவை; அந்த எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. எந்த பற்றாக்குறையும் இல்லை. குதிரை பேரம் என்பது வார்த்தை ஜாலம் மட்டுமே. நானே ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்று கூறினார்.
ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அந்த சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து இப்போது நான் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
வருவாய்த் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, அதற்கு வேலை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam