Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச)
சென்னை தியாகராய நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ நோயிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக, தி.நகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் என். ஆனந்த் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமிற்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சாக்லேட்கள் மற்றும் பொம்மைகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர், குழந்தைகளின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ