Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 28 ஜூன் (ஹி.ச)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுங்கச்சாவடி அறிவிப்பு பலகையின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சுஜாதா (51), சக்தி (21), வெற்றிவேல் (25) ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிவேகம் அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b