மதுரையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை - ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் கைது
மதுரை, 28 ஜூன் (ஹி.ச.) மதுரை மாவட்டம் செக்கனூரணி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செக்கனூரணி காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி ச
Sale of narcotic pills to students in Madurai


மதுரை, 28 ஜூன் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் செக்கனூரணி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செக்கனூரணி காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அதிக அளவிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடம் இருந்து ஏர் கன், வாள்கள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதவிர குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும், மடிக்கணினியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் இவர்களது விற்பனை வலைப்பின்னல் மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் இருக்கலாம் என்பதால் அதனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், மாவட்டத்தில் வேறு எங்கெல்லாம் இவர்கள் போதை மாத்திரைகளை விநியோகம் செய்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b