17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டதேவி ஆனித் தேரோட்டம்: அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்
சிவகங்கை, 28 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அனைத்து சமூகத்தினரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ச
Ther


சிவகங்கை, 28 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அனைத்து சமூகத்தினரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி மற்றும் இறகுசேரி ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் ஆனித் தேரோட்டம், தேரை இழுப்பது தொடர்பாக ஏற்பட்ட சமூக மோதல்களால் 1998-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை நடைபெற்ற தேரோட்டம், கும்பாபிஷேகம் மற்றும் தேர் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தேரோட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஆனித் திருவிழா ஜூன் 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இன்று அதிகாலை சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, காலை 8.42 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையாக வெளிநபர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு ஐஜி விஜேந்திர பிதாரி, டிஐஜிகள் மணிவண்ணன் மற்றும் மூர்த்தி, பல மாவட்ட எஸ்பிகள் தலைமையில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 3 கண்காணிப்பு கோபுரங்கள், 4 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டதுடன், தேரோட்டத்தை கண்காணிக்க 17 நிர்வாக நடுவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்டதேவியைச் சுற்றியுள்ள 24 கிராமங்களிலும் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Hindusthan Samachar / P YUVARAJ