Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 ஜூன் (ஹி.ச)
சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பைபாஸ் சாலை அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வரும் ஜூன் 29 (திங்கட்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மானியக் கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இச்சிறப்பு நேரடி நேர்காணலில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் வங்கிக் கடன்களும் அதற்கான மானியங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES): பெண்களுக்கு மட்டும் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25% மானியம்.
கலைஞர் கைவினைத் திட்டம் (KKT): கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய 25% மானியம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP): வியாபார நிறுவனங்களுக்கு 25% மானியம்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS): புதிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25% மானியம்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS): ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35% மானியம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP): உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 15% முதல் 35% வரை மானியம்.
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME): உணவுப்பொருள் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 35% மானியம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
வங்கி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழில் ஆர்வலர்கள் தங்களது அடையாள அட்டை, பான் கார்டு (PAN card), வங்கிப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ் (TC), தொழில் தொடங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல் (Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
புதியதாகத் தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b