Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் ரவுடிகள் சிலர் கஞ்சாவுடன் பதுங்கியிருப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் தலைமை காவலர் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட போலீசார், நள்ளிரவு தீவிர தேடல் வேட்டையில் இறங்கினர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் பிரபல ஏ-ப்ளஸ் கேட்டகிரி ரவுடி செல்வா என்கிற செல்வகுமார் மற்றும் ரவுடி கனகராஜ் என்பதும், அவர்கள் இருவரும் கஞ்சாவுடன் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி செல்வகுமார், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் ஆனந்தராஜை கையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். அந்த தாக்குதலில் தலைமை காவலருக்கு காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியுள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், ரவுடி செல்லா மீண்டும் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியை எடுத்து எச்சரித்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் ரவுடி செல்லா தாக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அவரது இடது காலில் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டுள்ளார். அதில் நிலைகுலைந்த செல்லா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
மேலும், அவரது கூட்டாளி கனகராஜூவையும் தப்பியோடாமல் கைது செய்த போலீசார், காயமடைந்த செல்லாவை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வெட்டுக்காயம் அடைந்த தலைமைக் காவலர் ஆனந்தராஜும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி செல்லா மற்றும் கனகராஜிடம் ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
தற்போது கைது செய்யப்பட்ட நபர்கள், ஓட்டேரி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் செல்லா ஏ-ப்ளஸ் கேட்டகிரி ரவுடி பட்டியலில் இருப்பதாகவும், இவர்கள் மீது 3 கொலை வழக்கு உட்பட கொலை முயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா, அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டுள்ள ரவுடி செல்வகுமார் மற்றும் கனகராஜ் இருவரும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்த ஆராமுதன் கொலை வழக்கில், சிறை சென்று வந்தவர்கள் என்பதும், கேளம்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் செல்வகுமார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இருவரும் கஞ்சா வழக்கில் சிக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தவுடன் புதிய டிஜிபி நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூன் 26 ) சென்னை நொளம்பூர் பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, இரண்டு மகன்களை வெட்டிவிட்டு தப்பி சென்ற முக்கிய நபரான ரூபேஷ் என்பவரை தனிப்படை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில், மண்ணிவாக்கத்தில் ஏ+ பிரிவு ரவுடி செல்லாவை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN