Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 28 ஜூன் (ஹி.ச.)
விஜயவாடா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் எம்.பி.யும் அரசியல் பிரமுகருமான கெசினேனி நானி, தனது சகோதரரும் தற்போதைய தெலுங்கு தேசம் கட்சி (TDP) எம்.பி.யுமான கெசினேனி சிவநாத் (சின்னி) மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சமூக வலைதளம் வாயிலாக அவர் எழுதியதாக கூறப்படும் பப்ளிக் லெட்டர் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ஹைதராபாத் புறநகர் பகுதிகளான பிரகதி நகர், ஷம்ஷிகுடா பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 112.72 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற முயற்சி நடைபெறுவதாக கெசினேனி நானி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலம் தெலங்கானா தொழில்துறை அடித்தள நிறுவனம் (TGIIC)க்கு சொந்தமானது என்றும், ஐடி பார்க் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட முக்கியமான அரசு நிலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலத்தை கெசினேனி சின்னி மற்றும் அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘எக்செல்லா பிராபர்டீஸ்’ என்ற தனியார் நிறுவனம் மூலம் பினாமி முறையில் கைப்பற்ற முயற்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறை (ED) முடக்க உத்தரவுகள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) விதித்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அவற்றை மறைத்து மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நானி தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின்படி, இந்த நிலத்திற்கு தனியார் உரிமை எதுவும் இல்லை (Zero Private Title) என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும், சிலர் தவறான ஆவணங்களை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் சமரச ஒப்பந்தம் மூலம் நிலத்தை கைப்பற்ற முயற்சி நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அரசு உடனடியாக தலையிட்டு இந்த நில கைப்பற்ற முயற்சியை தடுக்க வேண்டும் என்றும், ஹைட்ரா (HYDRA) அமைப்பை கொண்டு சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA