Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஜூன் (ஹி.ச)
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை அவர்களுக்கான நியமனப் பணிகளைத் தவிர வேறு எந்த பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று கழக நிர்வாகம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் கடுமையான சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 2026 ஜூன் 27 முதல் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களை அவர்களது முதன்மை பணிகளில் இருந்து மாற்றி, காசாளர் பணி, டிக்கெட் புத்தக பராமரிப்பு, பேருந்து நிலைய நிர்வாகப் பணி, பணி ஒதுக்கீட்டாளர் உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, உடல் நலக்குறைவு இல்லாத மற்றும் பணியை மேற்கொள்ளத் தகுதியான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை இலகு பணிகளுக்கு மாற்றுவது அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக தங்களது உரிய பணிகளுக்கும் செயல்பாட்டு வேலைகளுக்கும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி பணியாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்துவது ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது இதன் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
மேலும், உத்தரவின்படி பணியாளர் மாற்றங்களை மேற்கொள்ளத் தவறினால், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்களையே சாரும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ